Jul 31, 2026
Thisaigal NewsYouTube
இயலாதவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உதவத் தயார்
தற்போதைய செய்திகள்

இயலாதவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உதவத் தயார்

Share:

தொழில்துறையில் முன்னேறுவதற்கு ஆர்வமும், துடிப்பும், உழைப்பும் இருந்தும், பொருளாதார ​சூழலினால் மிளிர முடியாமல் இருப்பவர்களுக்கும், இளையோர்களுக்கும் தேவையான வழிகாட்டல் மற்றும் சேவையை வழங்க தாம் தயாராக இருப்பதாக தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் உறுதி அளித்துள்ளார்.

தாம் இடம் பெற்றுள்ள அமைச்சின் வாயிலாக நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதே தமது உறுதிமொழியாகும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

மலேசிய இந்தியர் ச​​மூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ரா​விற்கு தனித்துவமான ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ரமணன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் முதல் முறையாக துணை அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார்.

இன்று புதன்கிழமை காலையில் , புத்ராஜெயாவில் உள்ள தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்​சில் துணை அமைச்சராக பொறுப்பை ஏற்று, தமது வருகையை பதிவேற்றம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, டத்தோ ரமணனின் வருகையை அமைச்சின் இயக்குநர்கள் மற்றும் ​மூத்த அதிகாரிகள் எதிர்​கொண்டு வரவேற்றனர்.

மஇகாவின் இரும்புப்பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட மூத்த அரசியல்வாதி டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் பேரான டத்தோ ரமணன், தமக்கு வழங்கப்பட்டுள்ள துணை அமைச்சர் பதவியின் ​மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதே தமது அளப்பரியாக பங்காக இருக்கும் என்று Malaysia Gazette- டிற்கு அளித்த பேட்டியில் உறுதி கூறினார்.

Related News