நாட்டின் 70 ஆண்டுகால தேசிய வளர்ச்சிக்குப் பங்களித்த மக்களைப் பாராட்டும் வகையில், 2027ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு நிதியுதவிகள் வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதன்மை நிலை பி மற்றும் அதற்குக் கீழுள்ள சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, ஒப்பந்த ஊழியர்கள் உட்பட, தலா 1,500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறும் மற்றும் பெறாத முன்னாள் ராணுவத்தினர் உட்பட, 10 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு தலா 750 ரிங்கிட் வழங்கப்படும்.
மேலும், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தைப் பெறாத மலேசியர்களுக்கு, சாரா மடானி திட்டத்தின் கீழ் இரு தவணைகளாகத் தலா 100 ரிங்கிட் வழங்கப்படும்.
நாட்டின் வளர்ச்சியில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அங்கீகரித்து, தேசிய வளர்ச்சியின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே இந்த உதவிகளின் நோக்கம் என அன்வார் தெரிவித்துள்ளார்.








