ஷா ஆலாம், ஜனவரி.23-
முன்னாள் ராணுவத் தளபதி Hafizuddeain Jantan, தனக்கு எதிரான 1 லட்சத்து 45 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள இரண்டு புதிய பணமோசடிக் குற்றச்சாட்டுகளை மறுத்து, ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோரினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 மற்றும் 2025-ஆம் ஆண்டு மே 19 ஆகிய தேதிகளுக்கு இடையில், தனது வங்கிக் கணக்குகளில் 30 ஆயிரம் ரிங்கிட் மற்றும் 1 லட்சத்து 15 ஆயிரம் ரிங்கிட் தொகைகளைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றமானது அம்பாங் பாயிண்ட்டில் உள்ள ஒரு வங்கியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் வருமானத் தடுப்புச் சட்டம், பிரிவு 4(1) ஆகியவற்றின் கீழ் இக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குற்றம் சாட்டப்பட்ட லஞ்சத் தொகையில் ஐந்து மடங்கிற்குக் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.
இதனிடையே, நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தனக்கு எதிரான 2.12 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 4 பணமோசடிக் குற்றச்சாட்டுகளை மறுத்த Hafizuddeain, விசாரணை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏற்கனவே உள்ள 4 பணமோசடிக் குற்றச்சாட்டுகளுடன் சேர்த்து, இந்த புதிய குற்றச்சாட்டையும், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திலேயே விசாரணை செய்ய, ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நாசிர் நோர்டின் இன்று அனுமதி வழங்கினார்.








