கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
நாட்டின் தேசியத் தினத்தை முன்னிட்டு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் மக்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக அரசாங்கம், சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா என்ற சாரா உதவித் திட்டத்தின் வாயிலாக தலா 100 ரிங்கிட்டை வழங்கவிருக்கிறது.
இந்த 100 ரிங்கிட் சாரா நிதியை யாரெல்லாம் பெற முடியும் என்பது குறித்து தங்கள் தகுதி நிலையைச் சரி பார்த்துக் கொள்வதற்கு இன்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் https//sara.gov.my என்ற சாராவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
18 வயதை அடைந்தவர்கள் அல்லது 2007 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பிறந்த அனைவருமே சாராவின் 100 ரிங்கிட் நிதி உதவியைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதியைப் பெறுவதற்குத் தங்களைப் பதிவு செய்து கொள்ளவோ அல்லது விண்ணப்பிக்கவோ வேண்டியதில்லை என்பதை நிதி அமைச்சு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. தேசிய பதிவு இலாகாவின் மைகாட் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு இயல்பாகவே 100 ரிங்கிட் சேர்க்கப்பட்டு விடும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.








