Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உதவித் தொகைக்குரிய 1,899 எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

உதவித் தொகைக்குரிய 1,899 எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்

Share:

பத்து காஜா, ஆகஸ்ட்.06-

பேரா, பத்து காஜா, பெம்பான் தொழிற்பேட்டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், உதவித் தொகைக்கான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களிலிருந்து எரிவாயு, வேறு கலன்களுக்கு மாற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் ஓப் காசாக் என்ற பெயரில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பேரா மாநில அமலாக்க அதிகாரிகள் நடத்திய இந்தச் சோதனையில் மொத்தம் 1,899 எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தையில் கிலோவிற்கு 5 ரிங்கிட்டுக்கு வாங்க வேண்டிய எரிவாயுவை, உதவித் தொகைக்குரிய சலுகை விலையான ஒரு ரிங்கிட் 90 காசுக்கு, மொத்த வியாபாரிகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இந்தக் கும்பல் விலைக்கு வாங்கியுள்ளது.

இவ்வாறு குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் பின்னர் அவற்றின் எரிவாயுவை மற்ற கலன்களுக்கு மாற்றப்பட்டு, தொழில்துறையினருக்குக் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரிய வந்துள்ளது என்று பேரா மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாகச் செயல்பட்டு வரும் இந்த வளாகம், 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வர்த்தகம் மேற்கொள்வதற்கான எந்தவொரு செல்லத்தக்க ஆவணத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சோதனையில் மொத்தம் 1,899 எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மூலம் 66 ஆயிரத்து 500 ரிங்கிட் மதிப்புள்ள 18 ஆயிரத்து 194 கிலோ எடை கொண்ட எரிவாயு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டத்தோ கமாலுடின் குறிப்பிட்டார்.

Related News