மெர்சிங், டிசம்பர்.23-
கடந்த திங்கட்கிழமை சுங்கை லெங்கோர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட 36 வயது ஆடவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 12.49 மணியளவில், நீரில் மூழ்கிய நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டதாக மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர் அப்துல் முயிஸ் முக்தார் தெரிவித்தார்.
தனது இரண்டு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததையடுத்து, அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
என்றாலும், அந்த படகில் இருந்த மற்ற இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அப்துல் முயிஸ் முக்தார் குறிப்பிட்டார்.
இந்தத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில், மெர்சிங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 13 வீரர்களோடு, மற்ற இலாக்காக்களைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் ஈடுபட்டனர்.








