கோலாலம்பூர், நவம்பர்.16-
கோலாலம்பூர் மாநகரை நிர்வகித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர், மேயர்கள் எனப் பதவிகள் மாறிய போதும், இதுவரை யாரும் தலைநகரை திறமையாகவும் நேர்மையாகவும் மேம்படுத்தும் இலக்கை அடையவில்லை என்று டிஏபி கோலாலம்பூர் தலைவர் டான் கோக் வாய் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். புதிதாகப் பதவியேற்ற மேயரான ஃபாட்லுன் மாக் உஜுட்டுக்கு முன்பு, 16 மாதங்களில் மேயர் மாற்றப்பட்ட அதிரடிச் சூழலைக் குறிப்பிட்ட டான் கோக் வாய், புதிய மேயர் உயர்தர நிர்வாகத்தையும் மக்கள் நலனையும் உறுதிச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட புதிய கட்டுமானத் திட்டங்களை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேயர் பொதுப் பங்களிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்றும் டான் கோக் வாய் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஊழலைத் தடுக்கவும், மக்களாட்சி சேவையை வலுப்படுத்தவும், தலைநகரில் ஊராட்சித் தேர்தலை தாமதமின்றி மீண்டும் நடத்த வேண்டும் என்று அவர் ஆவேசமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.








