குவாந்தான், ஜனவரி.04-
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டிய பகாங் மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 2 இன்ஸ்பெக்டர்களும் 5 காவற்படை அதிகாரிகளும் போதைப் பொருள் பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மெந்தகாப்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை 2.15 மணிக்கு மின்னல் வேகத்தில் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில், காவற்படையினருடன் ஓர் உள்ளூர் நபரும் இரண்டு தாய்லாந்து நாட்டுப் பெண்களும் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
பிடிபட்டவர்களில் 6 காவற்படை அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரின் சிறுநீர் பரிசோதனையில் ketamin, methamphetamine போன்ற ஆபத்தான போதைப் பொருட்கள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டு, அங்கிருந்து போதைப் பொட்டலங்களும் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. "சட்டத்தின் முன் அனைவரும் சமமே, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" எனப் பகாங் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் கர்ஜித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் காவற்படை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








