நெகிரி செம்பிலான் பகாவ் வட்டாரத்தில் சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான 8 தோட்டங்களில் ரப்பர் பால் மரம் வெட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 300 தோட்டத் தொழிலாளர்கள் இம்மாதம் இறுதியோடு வேலை இழப்பை எதிர் நோக்கியுள்னர்.
பாதிக்கப்பட்ட 300 தொழிலாளர்களில் 30 சதவீத தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லை. அவர்கள் அடையாளம் காணப்பட்டு, நெகிரி செம்பிலான் மாநில அரசு மூலமாக மலிவு விலை வீடுகளை பெற்றுத் தர தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உரிய நடவடிக்கையில் இறக்கும் என்று நெகிரி செம்பிலான் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் கூறினார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. சங்கரன் தலைமையில் சிரம்பானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில செயலவைக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாந்தகுமார் பச்சையப்பன் இதனை தெரிவித்தார்.
லாடாங் செயிண்ட் ஹிலியர் , லாடாங் ஜுவாஸ்சே - லாடாங் சியலாங் - லாடாங் செபாலிங் - லாடாங் புக்கிட் பிசா - லாடாங் சுங்கை கெலாமா - லாடாங் நியு ரொம்பின் மற்றும் லாடாங் கெல்பின் ஆகியவையே தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளான எட்டு தோட்டங்களாகும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதி செய்யும் என்று சாந்தகுமார் பச்சையப்பன் தெரிவித்தார்.








