தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையமான ஆர்சிஐ அறிக்கையில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக, தாபோங் ஹாஜி வாரியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
60 வயதுக்கு உடப்ட்ட இருவரும், இன்று பிற்பகல் 4 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியப் புள்ளிகளான இவ்விருவரும் கைது செய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, தாபோங் ஹாஜி ஆர்சிஐ அறிக்கை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 27 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஆர்சிஐ அறிக்கையில், தாபோங் ஹாஜியின் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த 25 முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தாபோங் ஹாஜி வாரியத்தின் முன்னாள் தலைவர் ஒருவர், தாம் ஊழலில் சம்பந்தப்பட்ட வில்லை என்று கூறிய காணொளி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.








