கோலாலம்பூர், அக்டோபர்.07-
ஒரு மலேசியப் பிரஜையான 38 வயது பன்னீர் செல்வம் பரந்தாமன், சிங்கப்பூரில் நாளை அதிகாலையில் தூக்கிலிடப்படவிருக்கிறார். அவரின் விவகாரத்தை நாடாளுமன்ற சேம்பர்ஸ் அறையில் விவாதிப்பதற்கு மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இன்று அனுமதியளித்தார்.
பன்னீர் செல்வம் விவகாரம் தொடர்பில் புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங் கொண்டு வந்த அவசர தீர்மானத்தைத் தொடர்ந்து இவ்விவகாரம் மக்களவையில் சிறப்பு அறையில் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
ராம் கர்ப்பால் கொண்டு வந்த தீர்மானத்தைத் தாம் மதிப்பு ஆய்வு செய்ததாகவும், இது, வரையறுக்கப்பட்ட விஷயம் மட்டுமின்றி பொது நலன் மற்றும் அவசர இயல்புடையது என்பதால் அந்த அவசர தீர்மானத்தை விவாதிப்பதற்கு மூன்று அளவுகோல்களை நிறைவுச் செய்வதாக உள்ளது என்று சபாநாயகர் ஜொஹாரி அப்துல் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்படவிருக்கும் பேரா, ஈப்போவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் விவகாரம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்திய ராம் கர்ப்பால், அந்த மலேசியப் பிரஜையை சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் கடந்த செப்டம்பர் 27 அம் தேதி பேட்டி கண்ட புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் விசாரணை குறிப்பை சரிபார்க்கும்படி உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலைக் கேட்டுக் கொண்டார்.
காரணம், பன்னீர் செல்வத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பேட்டி கண்ட போது, அந்த மலேசிய இளைஞர் விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு முக்கியமானத் தகவலை வெளியிட்டதாக அறியப்படுகிறது.
அந்த முக்கியமான தகவலின் உண்மை நிலையைச் சரி பார்த்து, அது குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தனிப்பட்ட முறையில் ஒரு விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக நாளை புதன்கிழமை தூக்கிலிப்படவிருக்கும் பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்குமாறு உள்துறை அமைச்சர் என்ற முறையில் சைஃபுடின், சிங்கப்பூர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ராம் கர்ப்பால் வலியுறுத்தியிருந்தார்.








