பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளவிருக்கும் அமைச்சரவை மறு சீரமைப்பில் மஇகா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், இளைஞர் மற்றும் விளையாட்த்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.
அதேவேளையில் தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் டிஏபியை சேர்ந்த சிகாம்புட் எம்.பி. ஹன்னா இயோ, வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் மஇகாவின் பக்கம் திருப்புவதற்கு தாப்பா எம்.பி.யான டத்தோஸ்ரீ சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு டான்ஸ்ரீ முகைதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சரவையில் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ சரவணனுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பிரதமர் அன்வார் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக டத்தோஸ்ரீ சரவணன் நியமிக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.








