கோலாலம்பூர், ஜனவரி.05-
இராணுவ முகாம்களில் அனுமதியில்லாத சில தரப்பினர் நுழைவதாகவும், அங்கு ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாகவும், சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு உடனடியாக விசாரணை நடத்தவுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான உள் விசாரணை நடத்த, ஆயதப்படையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளானது, நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் இராணுவத்தின் ஒழுக்கம், பண்பாடு மற்றும் மதிப்புகளுக்கு எதிராக இருப்பதாகவும் அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், நடப்பு விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் படி, எந்த சமரசமும் இன்றி சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுபாங் விமானப்படை தளம் உட்பட சில இராணுவ முகாம்களில் அதிகாரிகள் மத்தியில் நிலவும் 'பொழுதுபோக்கு' கலாச்சாரம் என்று கூறும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








