Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லை புகார்: கிராப் ஓட்டுநரின் உரிமம் ரத்து
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை புகார்: கிராப் ஓட்டுநரின் உரிமம் ரத்து

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.03-

ஜோகூர் பாருவில் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கிராப் ஓட்டுநர், இனி எந்தவொரு இ-ஹெயிலிங் தளங்களிலும் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை போக்குவரத்து அமைச்சு மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் பொதுச் சேவை வாகன உரிமமான PSV- யை ரத்து செய்யுமாறு சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவிற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

PSV உரிமம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், அந்த ஓட்டுநர் இனி எந்தவொரு இ-ஹெயிலிங் நிறுவனத்திலும் ஓட்டுநராகப் பணிபுரிய அனுமதி இல்லை என்று அந்தோணி லோக் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தரைப் பொதுப் போக்குவரத்து முகமையான APAD மூலம் கிராப் உட்பட அனைத்து இ-ஹெயிலிங் நிறுவனங்களையும் நேரில் அழைத்து, பயணிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சு உத்தரவிடும் என்றும் அவர் கூறினார்.

பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளும் எந்தவொரு செயலையும் அமைச்சு சகித்துக் கொள்ளாது என்றும், குற்றவாளி மீது சட்டப்படி போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிச் செய்யப் பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்றும் அந்தோணி லோக் உறுதி அளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் அந்த ஓட்டுநரை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஜொகூர் பாருவில் நடந்த இந்தச் சம்பவம், இ-ஹெயிலிங் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News