ஷா ஆலாம், டிசம்பர்.16-
அண்மையில், எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஆல்பெர்ட் தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த ஓர் ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி, பூச்சோங்கில் உள்ள வீட்டில், வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட போது, எஸ்பிஆர்எம் அதிகாரி ஒருவர், அவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அவரின் மனைவி லீ பெய் ரீ, சிப்பாங் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நிறைய சாட்சிகள் முன்வந்து சாட்சியம் அளித்ததாகவும், மொத்தம் எத்தனை பேர் சாட்சியம் அளித்தார்கள் என்பதை இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளும், செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் தடயவியல் பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், எத்தனை சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற விவரத்தையும் வெளியிட ஷாஸெலி கஹார் மறுத்து விட்டார்.
இந்நிலையில், இதுவரையில், நடத்தப்பட்ட விசாரணையில் இக்குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தியுள்ளார்.








