Aug 30, 2026
Thisaigal NewsYouTube
பூடி95 மாதாந்திர ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு: கல்வி, மருத்துவம் வணிகம் உள்ளிட்ட நிதிகளை அதிரடியாக உயர்த்திய அன்வார்
தற்போதைய செய்திகள்

பூடி95 மாதாந்திர ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு: கல்வி, மருத்துவம் வணிகம் உள்ளிட்ட நிதிகளை அதிரடியாக உயர்த்திய அன்வார்

Share:

மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்டுள்ளார்.

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பூடி95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை ரோன்95 பெட்ரோல் ஒதுக்கீடு, மாதத்திற்கு 200 லிட்டரில் இருந்து 300 லிட்டராக அதிகரிக்கப்படுவதாக அன்வார் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பூடி டீசல் திட்டத்தின் கீழ் மானிய விலை டீசல் ஒதுக்கீடு, மாதத்திற்கு 300 லிட்டரில் இருந்து 400 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் டீசல் பிக்கப் டிரக்குகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தகுதியான உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வித்துறையில், 2027-ஆம் ஆண்டுக்கான பள்ளி பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக கூடுதலாக 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த ஒதுக்கீடான 1 பில்லியனில் ரிங்கிட்டில் இருந்து 1.5 பில்லியனாக உயர்கிறது.

மேலும், 18 முதல் 30 வயதுடைய இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கட்டமாக 1 லட்சம் இளைஞர்கள் இதில் இணைக்கப்பட உள்ளனர்.

மேலும், பொது சுகாதார சேவையை மேம்படுத்த 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 150 மருத்துவமனைகள் மற்றும் 2,000 சுகாதார கிளினிக்குகளில் மின்னனு மருத்துவப் பதிவு எனப்படும் இஎம்ஆர் (EMR) மற்றும் Wi-Fi வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் நோக்கம் சிகிச்சை செயல்முறையை விரைவுபடுத்துவதுடன், நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதாகும்.

இதனிடையே, சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் கெரான் செஜாஹ்தெரா மடானி (Geran Sejahtera MADANI) திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட உள்ளது.

மேலும், இ-இன்வோய்ஸ் (e-Invois) விலக்குக்கான ஆண்டு வருமான வரம்பு 1 மில்லியனில் இருந்து 3 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 1.1 மில்லியன் வணிகங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், 2026-ஆம் ஆண்டுக்கான சிறு தொழில் கடன் நிதியும் 5 பில்லியனில் இருந்து 6 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related News