கோலாலம்பூர், செப்டம்பர்.26-
நாட்டில் பருவமழை மாற்றம், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழைக் காலம், முடிவடைந்த நிலையில் பருவமழை மாற்றம் தொடங்குகிறது.
இந்த பருவமலை மாற்றக் கட்டத்தில், நாடு பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமானக் காற்றை எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலை இடியுடன் கூடிய மழை உருவாக வழிவகுக்கும். அது குறுகிய காலத்தில், குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அதிக மழை மற்றும் பலத்த காற்றுடன் இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீபகற்ப மலேசியாவில் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் மேற்கிலும் இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.








