நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தமது தேசியக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தயாராக இருப்பதாக மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கன்டார் அறிவித்துள்ளார். அதேவேளையில் நாட்டின் அடுத்த மாமன்னராக பொறுப்பேற்பதற்கான வரிசையில் முதல் நிலையில் இருப்பவரான ஜோகூர் சுல்தான், மாமன்னராவதற்கான தமது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மாமன்னர் பதவி என்பது தமக்கான பதவி உயர்வு அல்ல. இது தமது சகோதர ஆட்சியாளர்களின் சார்பாக தாம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடாகும் என்று சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டார் ஆங்கில நாளேட்டின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் டத்தோ செரி வோங் சுன் வாய் தலைமையிலான பெர்மானாவின் முதிர் நிலை ஆசிரியர் குழுவினருக்கு தமது இல்லத்தில் வழங்கிய சிறப்பு நேர்க்காணலில் சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்துளூளார்.எல்லா நிலைகளிலும் மக்கள் நலனே தமது முதன்மையான கடமையாகும், முன்னுரிமையாகும் என்று மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளரான சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். ராக்யாட் என்பவர்களுக்கே முதலிடம். எனினும் இவ்விவகாரத்தில் ஆட்சியாளர்கள் மாநாடு முடியும் வரை சற்று காத்திருப்பதே சிறந்த நடவடிக்கையாகும் என்று கூறிய சுல்தான் இப்ராஹிம், மேலும் விளக்கம் அளிக்க மறுத்து விட்டார்.மாமன்னரை தேர்வு செய்யும் ஆட்சியாளர்களின் தனித்துவமான தேர்தல், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒன்பது ஆட்சியாளர்களை கொண்டுள்ள மலேசிய சமஸ்தான பரிபாலனத்தில் சுழல்முறையில் மாமன்னரை தேர்வு செய்வது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 16 ஆவது மாமன்னராக பொறுப்பேற்றுள்ள பகாங் சுல்தான், மாட்சிமை தங்கிய சுல்தான் அப்துல்லாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சிக்காலம் வரும் ஜனவரி மாதம் இறுதியில் நிறைவுக்கு வருகிறது.








