Nov 14, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்! இந்தியர்களின் நலன், தமிழ்ப்பள்ளிகள், கோயில் விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் – பிரதமர் அன்வார் உறுதி!

மலேசியாவில் தீபாவளி என்பது இந்தியச் சமூகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல; நீதி, மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் நன்னாளாக அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளியின் உண்மையான அடையாளம் இருளை அகற்றி ஒளியைப் பரப்புவதாகும். அதேபோன்று, சமூகத்தில் அநீதியையும் தீய சக்திகளையும் எதிர்த்து, நீதி, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில் தேசிய அளவில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையேற்று உரையாற்றினார். பாரம்பரியத் தலைப்பாகையும் ஜீப்பாவும் அணிந்து நிகழ்வில் அவர் பங்கேற்றார்.

இந்தியச் சமூகத்தின் மேம்பாடு குறித்துப் பேசிய அவர், தமிழ்ப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல், இந்துக் கோயில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், இந்திய வணிகர்களின் நலன்களைப் பாதுகாத்தல், நகர்ப்புற மற்றும் தோட்டப்புறங்களில் வாழும் ஏழை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

குறிப்பாக, தமிழ்மொழிக் கல்வி, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் இந்துக் கோயில்கள் தொடர்பான விவகாரங்கள் உரிய முறையில் கையாளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதேவேளையில், இன அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்காமல், தேவையுடைய அனைத்து மக்களுக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அணுகுமுறை என்றார். அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இனங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான், கடசான் என அனைத்து இன மக்களும் பரஸ்பர மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதே மலேசியாவின் பலம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும், இன உணர்வுகளைத் தூண்டி ஊழல் மற்றும் மோசடிப் பிரச்சினைகளை மறைக்க முயற்சிப்பவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

திருக்குறளின் நீதி, மனிதநேயம், அண்டை வீட்டாருடன் நல்லுறவு பேணுதல் போன்ற உயரிய சிந்தனைகளையும் தனது உரையில் நினைவுகூர்ந்த அன்வார், உண்மை மற்றும் நீதிக்காகத் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் இந்தியச் சமூகத்தினருக்கு நம்பிக்கையூட்டினார்.

இன ஒற்றுமையும் மனிதநேயமும் மலேசியாவின் அடித்தளமாகத் தொடர வேண்டும் என்பதே பிரதமரின் தீபாவளிச் செய்தியாக அமைந்தது.

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த தீபாவளி உபசரிப்பில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங், துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன், மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ, மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ என். கோபாலகிருஷ்ணன் உட்பட முக்கியப் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →