சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏர்போர்னியோ ஏர்வேய்ஸ் செண்டிரியான் பெர்ஹாட், கூச்சிங் மற்றும் ஜகார்த்தா இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்த நேரடி விமானச் சேவையின் முதல் விமானமான MY396, நேற்று கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தில் ஜகார்த்தாவில் உள்ள Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையம் முனையம் 3-ஐச் சென்றடைந்தது.
அங்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடித்து விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜகார்த்தா நகரானது இந்தோனேசியாவில் ஏர்போர்னியோ நிறுவனத்தின் முதல் விமான இலக்காகவும், கடந்த ஜூலை மாதம் விமானச் சேவைகளைத் தொடங்கியதிலிருந்து அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய மூன்றாவது ஜெட் விமான வழித்தடமாகவும் அமைந்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி மெகாட் அர்டியான் அமினுடின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூச்சிங்கிலிருந்து ஜகார்த்தா செல்வதற்கான ஒரு வழிப் பயணக் கட்டணம் எகோனொமி பிரிவுக்கு 399 ரிங்கிட் முதல் தொடங்குகிறது.
வர்த்தகப் பிரிவுக்கான கட்டணம் 888 ரிங்கிட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








