ஷா ஆலாம், ஆகஸ்ட்.15-
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கூட்டரசு நெடுஞ்சாலையில், ஷா ஆலாம், யுஐடிஎம் பல்கலைக்கழகம், எல்ஆர்டி நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் மரணமுற்ற உள்ளூர் நடிகரும், பாடகருமான பர்வீன் நாயர் சுரேந்திரன் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பாக, யாராவது தங்களின் வாகனத்தின் டேஷ்கேம் கேமரா பதிவு இருக்குமானால் அதனை விசாரணைக்குக் கொடுத்து உதவும்படி குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
33 வயதுடைய தனது சகோதரன் மோட்டார் சைக்கிளில் கோலாலம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது காலை 8 மணிக்கும் 9.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்த கலைஞரின் தங்கை எஸ். யசோதா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறியவே யாரிடமாவது டேஷ்கேம் கேமரா பதிவு உள்ளதா? என்பதைத் தாங்கள் கோருவதாக யசோதா குறிப்பிட்டார்.
இதுவரை டேஷ்கேம் கேமரா பதிவைத் தேடுவதில் வெற்றி கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்ட்ரோவில் கல்யாணம் ஒரு காதல் மற்றும் மன்மத புல்லட் போன்ற நாடகங்களில் நடித்தவரான பர்வீன் நாயர், கடந்த மார்ச் மாதம் கங்கி ஏஷினி என்பவரை வாழ்க்கைத் துணைவியாகக் கரம் பிடித்தார்.








