நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், தலையில் ரப்பர் குழாயினால் பல முறை தாக்கப்பட்ட ஓர் இந்திய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதியவர் ஒருவர் தலையில் பலமாக தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் நெகிரி செம்பிலான், சிரம்பான் பகுதியில் ராசா ஜெயா 2 இல் உள்ள அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஓர் ஆடவர் முதியவரை ரப்பர் குழாயினால் தலையில் மிகக் கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட முதியவரின் மீது அக்கறை கொண்ட தன்னார்வலர் மற்றும் 'இந்து தாஸ்க் ஃபோர்ஸ்' (Hindu Task Force) அமைப்பின் பொறுப்பாளருமான பூபாலன் மூக்கன் என்பவர் இன்று காலை போலீஸ் துறையில் புகார் அளித்துள்ளார்.
அவர் சிலாங்கூர், செராஸ் 9 ஆவது மைல் போலீஸ் நிலையத்தில் இந்தப் புகாரை பதிவு செய்துள்ளார். உயிரிழந்த முதியவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், முதியவரின் சவ அடக்க நிகழ்வுக்கு முன்னதாக அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.








