ரோன்95 பெட்ரோலில் தண்ணீர் கலந்ததாகக் கூறப்படும் புகார்களால் வாகனங்கள் பழுதடைந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு கால்டெக்ஸ் (Caltex) மற்றும் பெட்ரோன் (Petron) நிறுவனங்கள் நிவாரணத் தொகை வழங்கத் தொடங்கியுள்ளன.
இதனை உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முஹமட் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தொகையானது வழங்கப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது தவறை ஒப்புக் கொண்டதாகக் கருத முடியாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பெட்ரோலில் தண்ணீர் கலந்ததற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆதார ஆவணங்களுடன் புகார் அளிக்க வேண்டும் என்றும் அர்மிஸான் முஹமட் அலி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நிறுவனங்கள் நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, வழங்கப்படும் நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனக் கருதும் வாகனமோட்டிகள், அமைச்சிடம் புகார் அளிக்கலாம் என்றும், சிவில் வழக்குத் தொடரலாம் அல்லது நுகர்வோர் கோரிக்கை அமைப்பை நாடலாம் என்றும் அர்மிஸான் தெரிவித்துள்ளார்.








