நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற நிலையில் காணப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநிலக் கல்வித்துறை இயக்குநர் காலிடா ஓமார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திரேட்ஸ் சமூக ஊடகத்தில் பரவிய அந்தக் காணொளியில், எஸ்பிஎம் தேர்வு எழுதவுள்ள மாணவர் ஒருவர், 'பியு பியு’ எனப்படும் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அந்தக் காணொளியில், வகுப்பறையில் மேசை அருகே மாணவர் ஒருவர் தலையைக் குனிந்தபடி முன்னோக்கி வளைந்து அசைவின்றி நிற்பதைக் காண முடிகிறது. அவரைச் சுற்றி சக மாணவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, பள்ளிச் சீருடையில் இருந்த சில மாணவர்கள் அந்தச் சம்பவத்தைத் தங்களது கைப்பேசிகளில் பதிவு செய்துள்ளனர்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியையும் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.








