ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.17-
ஜோகூரில், பத்து வயதுச் சிறுவன் இஸ்ஸூல் இஸ்லாம் அஸுவான் இசைடி கொடூரமாகத் தாக்கப்பட்டு மூளை அதிர்வு பாதிப்புக்கு உள்ளானான். பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் 39 வயது சித்தி சுஹானா மிஸ்டி, தனது மகன், தன்னை விட இரண்டு வயது மூத்த மாணவனால் தாக்கப்பட்டதாகக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
தலையிலும் கழுத்துப் பகுதியிலும் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அச்சிறுவன் பலவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நேர்ந்த இச்சம்பவத்திற்கு நியாயம் கோரி கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி தாமான் யுனிவெர்சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தும், குற்றவாளி சிறார் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அத்தாயார் வருத்தம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் இருந்து மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.








