ஜோகூர் பாரு, அக்டோபர்.15-
சிங்கப்பூருடனான குடிநுழைவுச் சோதனையை எளிதாக்க புதிய QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தியுள்ள அரசு, இதற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுவரை 80,000 பேருக்கு மேற்பட்டோர் இப்பயன்பாட்டில் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கார்களுக்குத் தொடங்கப்பட்ட இச்சோதனை முயற்சி, இன்று முதல் மோட்டார் சைக்கிள் பயணிகள், பாதசாரி பயணிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
MyNIISe மொபைல் பயன்பாட்டின் மூலம், தற்போது சுல்தான் அபு பாக்கார் காம்ப்ளெக்ஸ் மற்றும் சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் ஆகியவற்றில் மோட்டார் ஓட்டிகளும், பாதசாரிகளும் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்ளலாம்.
இச்சோதனைக் கட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள MyBorderPass மற்றும் QR குறியீட்டு முறைமையும், சுமார் 4 லட்சம் மலேசியர்களுக்காக தொடர்ச்சியாக இயங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








