புத்ராஜெயா, நவம்பர்.01-
மலேசியாவில் உள்ளூர் உள்ளடக்கம் 80 விழுக்காடு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக நீக்க வேண்டும் என்ற வதந்தியை மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒரு முன்னாள் தலைமைப் பதிப்பாசிரியர் முன்வைத்த இந்தத் தகவல் உண்மையற்றது, குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள உரிமக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கவில்லை என்றும் ஆணையம் அறிவித்தது.
உண்மையில், தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998-ன் கீழ் வழங்கப்படும் தனியார் ஒலிபரப்பு உரிமங்களில் 80 விழுக்காடு உள்ளூர் உள்ளடக்க ஒதுக்கீடு என்ற நிபந்தனையே இல்லை; சந்தைத் தேவையின் அடிப்படையில் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்க ஒளிபரப்பாளர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது தரமான உள்ளூர் உள்ளடக்கத்தை வலுப்படுத்தவும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் தேசிய ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்கி வருகிறது என ஆணையம் தெளிவுபடுத்தியது.








