முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தனது 12 வயது மகன் எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு வந்தது தொடர்பாக அந்த ஆணையம் அளித்துள்ள விளக்கத்தை முற்றிலும் நியாயமற்றது என்று விமர்சித்துள்ளார்.
முக்கியமான புலனாய்வு அதிகாரங்களைக் கொண்ட ஓர் அமைப்பு, 12 வயது சிறுவன் தொடர்பான விவகாரத்தில் அடிப்படை நிதானத்தையும் பொது அறிவையும் கடைப்பிடிக்கத் தவறியது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவர்கள் பெற்றோருடன் வந்ததாக எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறியிருப்பது பொருத்தமற்ற விளக்கம் என்றும் சரவணன் தெரிவித்தார்.
முன்னதாக, 12 வயது மகனுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்றும், அவரது வயதை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அப்துல் ஹலிம் விளக்கினார்.
ஆனால், இந்த முடிவை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டாமா என்றும், நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கையில் தனது மகனை ஈடுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் சரவணன் கேள்வி எழுப்பினார்.
தனது மகனுக்கான நோட்டீஸை அவரது தந்தையான தம்மிடம் வழங்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.








