கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
கோலாலம்பூர், லேபோ புடு பகுதியில் உள்ள பொழுதுபோக்கு மையமொன்றில் மலேசிய குடிநுழைவுத்துறை இன்று அதிகாலை நடத்திய சோதனையில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பத்து ஆடவர்களும் 12 பெண்களும் மியன்மார் நாட்டவர்கள். மேலும் மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய ஒருவர் வங்காளதேசி. மொத்தம் 32 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் வான் முகமட் சௌபி வான் யூசோஃப் தெரிவித்தார்.
சோதனையின் போது அந்த பொழுதுபோக்கு மையம் வெறிச்சோடிக் கிடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தீவிரப் பரிசோதனையில் அந்த வளாகத்தின் சுவற்றின் பின்னால் ரகசியக் கதவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வான் முகமட் குறிப்பிட்டார்.
மூன்று அடுக்குக் கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பல வெளிநாட்டவர்கள் ஒளிந்து பதுங்கியிருந்தது தெரிய வந்ததாக அவர் மேலும் கூறினார்.








