மலேசியர்களின் சம்பள முறையில் மாபெரும் சீரமைப்பை ஏற்படுத்த வல்ல, முற்போக்கான சம்பள கொள்கை, அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் அமல்படுத்தப்படலாம் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
முற்போக்கான சம்பள முறையை இலக்காக கொண்டு தேவையான உள்ளீடுகள், வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
இதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிக் காட்டிவிட்டதால் இனி இதனை பட்ஜெட்டில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ரஃபிஸி ரம்லி விளக்கினார்.
உற்பத்தித் திறனை அடிப்படையாக கொண்டு சில கவர்ச்சிகரமான அனுகூலங்களுடன் முற்போக்கான சம்பள முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் கோடி காட்டிருப்பது தொடர்பில் கருத்து கேட்டபோது ரஃபிஸி ரம்லி மேற்கண்டவாறு தெரிவித்தார்.








