கோலாலம்பூர், நவம்பர்.20-
அடுத்த ஆண்டு முதல், சுத்தமான கழிப்பறைகளையும், சுகாதாரத் தரங்களையும் பூர்த்தி செய்யும் பணியிடங்களுக்கு மட்டுமே வணிக உரிமங்கள் வழங்கப்படும் என வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள கழிப்பறைகளின் பராமரிப்புத் தரத்தை உயர்த்துவதற்கான அமைச்சின் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2026-ஆம் ஆண்டு முதல் நகர் மன்றங்களிலும், 2027-ஆம் ஆண்டு ஊராட்சி மன்றங்களிலும், 2028-ஆம் ஆண்டு மாவட்ட மன்றங்களிலும் இந்த நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையானது, நாட்டிலுள்ள வணிக வளாகங்கள், அரசுக் கட்டிடங்கள் உள்ளிட்டவைகளில், மக்களின் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் ஆண்களுக்கான ஒரு கழிப்பறையும் மற்றும் பெண்களுக்கான ஒரு கழிப்பறையும் இருக்கும் வகையில் வழிவகுப்பதாகவும் ங்கா கோர் மிங் குறிப்பிட்டுள்ளார்.








