கோலாலம்பூர், ஜூலை.22-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பவளப் பாறைத் தீவான பத்து பூத்தே தீவு, அண்டை நாடான சிங்கப்பூருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீரின் வயது காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.
பத்து பூத்தே தீவை மலேசியா இழந்ததற்கு துன் மகாதீர் தவறு செய்திருந்தாலும், 100 வயதை எட்டியுள்ள அந்த முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நோக்கம் கொண்டு இருக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
அப்படியென்றால் 100 வயது எட்டியுள்ள துன் மகாதீர், பத்து பூத்தே தீவு விவகாரத்தில் குற்றம் இழைத்துள்ளாரா என்று எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதில் அளித்த அன்வார், ஆம், அவர் தவறு செய்துள்ளார் என்று பிரதமர் பதில் அளித்தார்.
இருந்த போதிலும் அந்த மூத்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தாமும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவு செய்து இருப்பதாக அன்வார் விளக்கினார்.








