முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தமது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலியின் மறைவுக்குப் பின்னர் துயரத்தில் இருக்கும் காட்சிகள் தொடர்பான ஊடக செய்தியிடலில் ஆட்சேபனை இருப்பவர்கள், அதிகாரப்பூர்வமாக மலேசிய ஊடக மன்றமான எம்எம்எம்முக்கு புகார் அளிக்க வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
ஊடக செய்தியிடல் தொடர்பான குறைகளை உரிய வழிமுறையில் தெரிவிப்பதன் மூலம், தவறான புரிதல்களையும் ஊடகத்துறையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளையும் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
அதேவேளை, துக்கத்தில் இருக்கும் மகாதீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஊடகங்கள் போதிய இடமும் தனிமையும் வழங்கி, குடும்பத்தினரின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்றும் ஃபாஹ்மி கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, மகாதீரின் துயரக் காட்சிகளை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைத்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக எம்சிஎம்சி விசாரணை நடத்தி வருகிறது.








