Oct 6, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோ திடீர் வெள்ளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு தேவை – கோபிந்த் சிங்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோ திடீர் வெள்ளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு தேவை – கோபிந்த் சிங்

சுங்கை பூலோ கே.டி.எம். நிலையம் அருகே சுங்கை காசி - FT54 சாலையில் ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

கனமழையின்போது மலைப்பகுதியிலிருந்து வரும் நீர் வடிகால் வழியாகச் சென்று ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலையின் கீழ் தேங்குவதால், பின்நீர் ஓட்டம் ஏற்பட்டு சாலையில் திடீர் வெள்ளம் உருவாவதாக அவர் தெரிவித்தார். இது சாலைப் பயணிகள் மற்றும் ரயில் சேவையின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.

நீர்பாசன மற்றும் வடிகால் இலாகா, நகராண்மைக்கழகம், பொதுப்பணித்துறை மற்றும் ரயில்வே சொத்து நிறுவனமான ஆர்ஏசி ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இன்று சுங்கை பூலோ, சுங்கை காசி - FT54 பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் கோபிந்த் சிங் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

பிரச்னைக்கு நீண்டகாலத் தீர்வுக்கான திட்டம் ஏற்கெனவே இருப்பதாகவும், அதற்காக ஓரிரு ஆண்டுகள் காத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். தற்காலிக நீர்த்தேக்கக் குளம் அமைத்தல், வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட குறுகிய மற்றும் நீண்டகாலத் தீர்வுகள் குறித்து இந்த வாரமே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

“பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை. திடீர் வெள்ளம் எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே, கனமழை பெய்யும்போது நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான கட்டமைப்புப் பணிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். சாலையைப் பயன் படுத்துபவர்களும், ரயில் பயணிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →