கோலாலம்பூர், ஜனவரி.22-
வரவிருக்கும் சீனப் புத்தாண்டு கால நெரிசலைச் சமாளிக்க, பிப்ரவரி 12 முதல் 24 ஆம் தேதி வரை 150 கூடுதல் உள்நாட்டு விமானச் சேவைகளையும் சேர்த்து மொத்தம் 4,434 விமானங்களை இயக்கவுள்ளதாக ஏர்ஏசியா விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இதுவே மிகவும் பரபரப்பான பண்டிகைக் காலப் பயணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியர்கள் மலிவான கட்டணத்தில் பயணம் செய்வதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு ஆதரவாக, ஒருவழிப் பயணக் கட்டணத்தை அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக ஏர்ஏசியா நிர்ணயித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் 20 கிலோ இலவசப் Baggage வசதியும் அடங்கும்.
இது குறித்து ஏர்ஏசியா மலேசியாவின் பொது மேலாளர் Datuk Captain Fareh Mazputra கூறுகையில், "தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா இடையே தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கு இந்த மானிய விலைக் கட்டணங்கள் பொருந்தும். கூடுதல் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பயணிகள் இன்னும் தாராளமாகத் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்," எனத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 61 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஏர்ஏசியா, மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பண்டிகையைக் கொண்டாட இந்த மலிவு விலை மற்றும் கூடுதல் சேவைகள் பெரிதும் உதவும் என நம்புகிறது.








