மைஏர்லைன் விமான நிறுவனம் திடீரென்று தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அந்த உள்ளூர் விமான நிறுவனத்தின் 123 தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் உறுதி அளித்துள்ளார். குறிப்பாக, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இரண்டு மாத சம்பளப்பாக்கி உட்பட இதர உரிமை கோரல்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்படுவர் என்று அமைச்சர் விளக்கினார்.
மைஏர்லைன் தொழிலாளர்களின் நலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் மனித வள அமைச்சு, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 123 தொழிலாளர்கள், தாங்கள் பணியாற்றிய விமான நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இதில் நிலுவையில் உள்ள அவர்களின் சம்பளப்பாக்கியும் அடங்கும் என்று அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.








