கிள்ளான், செப்டம்பர்.19-
கிள்ளான், பண்டார் பாரு கிள்ளானில் ஒரு கொண்டோமினியம் வீட்டில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு ஆடவர் ஒருவர், தனது காதலியைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம், பொறாமையினால் விளைந்ததாகும் என்று சந்தேகிக்கப்படுவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் குறித்து மாலை 4.35 மணிக்கு போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளது. கைகளினால் அந்த ஆடவர் தனது காதலியைத் தாக்கியுள்ளார். இதில் 29 வயது பெண் காயமடைந்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகிவிட்ட அந்தப் பெண்ணின் 30 வயது காதலனைப் போலீசார் தேடி வருவதாக விஜயராவ் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பெண், மற்றொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்துள்ள அந்த ஆடவர், வன்முறையில் ஈடுபட்டுள்ளார் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஜயராவ் தெரிவித்துள்ளார்.
அந்த ஆடவர் தனது காதலியைத் தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி , சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.








