கோல திரங்கானு, ஜனவரி.26-
முன்னாள் ராணுவத் தளபதி டான் ஶ்ரீ முஹமட் ஹாஃபிஸுடின் ஜந்தான் மனைவி சல்வானி அனுவார் கமாருடின், கடந்த ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் 5 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாக இன்று கோல திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
27 வயதான சல்வானி, நீதிபதி முஹமட் அஸார் ஒத்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினார். அவரது வங்கிக் கணக்கில் சட்டவிரோத நடவடிக்கை மூலம் வந்த 5 ஆயிரம் ரிங்கிட் டெபாசிட் செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சல்வானி அனுவார், இந்தக் குற்றத்தை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி பெசுட் அருகிலுள்ள கெர்தே வங்கிக் கிளையில் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு 2001 ஆம் ஆண்டு பண மோசடி எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சட்டவிரோத வருமானத்தைப் போல ஐந்து மடங்கு அல்லது 5 மில்லியன் ரிங்கிட் அபாரதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.








