கோலாலம்பூர், டிசம்பர்.19-
கடந்த அக்டோபர் மாதம் பண்டார் உத்தாமா பள்ளியில், மாணவி ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது மாணவரின், முழுமையான மனநல அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணையானது அடுத்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, எதிர்தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அமீரா சரியாத்தி ஸைனால் இம்முடிவை எடுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் இன்று எதிர்தரப்பு வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் விடுத்த கோரிக்கையில், தனது கட்சிக்காரர், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில், மனநல சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பஹாகியா மருத்துவமனையில், குடும்ப உறுப்பினர்களுடனான நேர்காணல்கள், ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்தல் போன்ற அனைத்து வகையான பரிசீலனைகளும் விசாரணை அதிகாரியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மதிப்பீட்டைப் பெற்று வருவதால் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குற்றச்சாட்டப்பட்டுள்ள தனது கட்சிக்காரர், மருத்துவ சிகிச்சைகளால், மன நிலையில் நல்ல முன்னேற்றங்களை அடைந்து வருவதாகவும் கிட்சன் ஃபூங் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக, 14 வயது மாணவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.








