தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து அல்டிமேட் செஃப் சேலஞ்ச் 2026 எனும் அனைத்துலக சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்து கொண்ட செஃப் யுவன், / செஃப் ஷஃபிக் மற்றும் செஃப் லியோ ஆகியோருடன் இணைந்து சாம்பியன் கிண்ணத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மே 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த அனைத்துலகப் போட்டியில் யுவன் பங்கேற்பதற்கான வாய்ப்பையும், ஆதரவையும் லோட்டஸ் மலேசியா நிறுவனம் வழங்கியதாக செஃப் யுவன் நன்றிபெருக்குடன் கூறினார்.
அதுமட்டுமின்றி, தனிநபர் பிரிவுகளிலும் சிறப்பாகப் பங்கேற்ற செஃப் யுவன், மேலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தனது திறமையை அனைத்துலக அரங்கில் மீண்டும் நிரூபித்துள்ளார்.
செஃப் யுவனின் முந்தைய சாதனைகளில் சாம்பியன் கப், செகண்ட் ரன்னர் அப் பட்டம், தங்கப் பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள், வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த அனைத்துலக போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செஃப் யுவன், இந்திய இளைஞர்கள் அதிக அளவில் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் இணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“சமையல் துறை என்பது ஒரு வேலை மட்டுமல்ல; அது ஒரு சிறந்த தொழில் வாய்ப்பு. ஹோட்டல்கள், கப்பல் சுற்றுலா, விமான சேவைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறும் வாய்ப்புகளை இது வழங்குகிறது. இந்திய இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகமாக ஈடுபட்டால், தனிநபர் முன்னேற்றத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் அடைய முடியும் என்று செஃப் யுவன் வலியுறுத்தினார்.












