யோங் பெங் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில், இரத்த வெள்ளத்தில் பள்ளி மண்டபத்திற்குள் கிடந்த தனது 16 வயது பேத்தி ஐரின் சோஃபியா முஹமட் கைரோல் ஃபைசாலை, உயிர் பிரியும் தருவாயில் கடைசியாக கையில் ஏந்தியதாக அவரது 66 வயதான பாட்டி ஜமேயா ரபானி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் ஐரினைக் காணவில்லை எனக் கூறி அவரது இரண்டு பள்ளித் தோழிகள் ஜமேயாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பள்ளியில் ஐரினின் மோட்டார் சைக்கிள் இருந்த போதும், அவர் காணப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள், ஜமேயா மற்றும் 45 வயதான் அவரது மூத்த மகள் சித்தி நூர் ஃபைஸா ஆகியோருடன் சேர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளி வளாகத்திற்குச் சென்று தேடியுள்ளனர்.
அப்போது ஐரின் பள்ளி மண்டபத்திற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவரது தோழிகளில் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு சென்ற ஜமேயா, தனது பேத்தியை கையில் ஏந்தி “ஃபியா” என அழைத்ததுடன், இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் ஓதியுள்ளார்.
அப்போது உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஐரின், பாட்டியின் முகத்தை கடைசியாக பார்த்த பின்னர் அசைவின்றி உயிரிழந்ததாக ஜமேயா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.








