ஷா ஆலாம், டிசம்பர்.05-
மலாக்காவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுயேட்சையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மூடா கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் R. சிவபிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
மூவர் பலியான இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் தமக்கும் உடன்பாடு இருப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.
மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட முறையானது, விசாரணை இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் சொந்த குடும்பத்தினரே கூறும்போது, இது உண்மையிலேயே ஒரு சிறிய பிரச்சினை அல்ல. இது அரச மலேசிய போலீஸ் படையின் நேர்மை மீதான மக்களின் நம்பிக்கையைப் பற்றிய விஷயமாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆனால் பல போலீஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் வழக்குத் தொடரப்படாமலேயே முடிவுக்கு வந்திருக்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. IPCMC போன்ற ஒரு சுயேட்சையான ஆணையம் இல்லாமல், மக்கள் எப்படி இதனை நம்ப முடியும் என்று சிவபிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
போலீஸ் துறையினர் ஒரே நேரத்தில் பிராசிகியூஷன் அதிகாரிகளாகவும், தண்டனை விதிக்கும் நீதிபதிகளாகவும் இருக்க முடியாது. சட்டத்தை முன்நிறுத்தி, போலீஸ் தரப்பினர் முன்வைக்கும் வழக்குகளில் தீர்ப்பு அளிப்பதற்காகவே நாட்டில் நீதிமன்றமும், நீதிபதிகளும், நீதிபரிபாலனமும் உள்ளது என்பதை போலீஸ் துறையினர் மறந்து விடக்கூடாது.
சட்டத்தை அமல்படுத்துகின்றவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் நாட்டில் எதற்கு நீதிமன்றம், நீதிபதிகள் என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் சிவபிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று இந்திய இளைஞர்களின் குடும்பத்தினருக்கு நீதிக் கிடைக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை விசாரிக்கத்தான் IPCMC போன்ற போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை கொண்ட போலீஸ்காரர்களை விசாரணை செய்வதற்கு ஓர் ஆணையம் நாட்டில் தேவை என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று சிவபிரகாஷ் சுட்டிக் காட்டினார்.








