பாங்கி, ஜனவரி.23-
சிலாங்கூர் மாநிலத்தின் பன்றி வளர்ப்புத் தொழிலை புக்கிட் தாகார் பகுதியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக "மிகப் பொருத்தமான" வேறொரு இடத்தை பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பன்றி வளர்ப்புத் தொழிலை ஒருங்கிணைக்கும் திட்டம் மற்றும் அது குறித்து அப்பகுதி மக்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
இன்று பாங்கியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களின் அச்சம் ஆகிய விவகாரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இது குறித்து தாம் சிலாங்கூர் மந்திரி பெசாருடன் கலந்து ஆலோசிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
உலு சிலாங்கூர் பகுதியில் பன்றி வளர்ப்புத் தொழிலை ஒருங்கிணைக்கும் மாநில அரசின் திட்டத்திற்குத் தமது எதிர்ப்பை சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








