டெங்கில், பிப்ரவரி.15-
அனைத்துலக இணையதளம் ஒன்றின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தாம் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், வழக்கம் போல் தனது பணிகளைத் தொடரப் போவதாகவும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பலரே இன்னும் பணியில் இருக்கும் போது, தாம் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் பதவி விலக வேண்டிய கட்டாயமில்லை என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பங்கு உரிமை தொடர்பான விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிடம் முழு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும், தேவையான ஆவணங்களை மறைக்காமல் சமர்ப்பிக்கப் போவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், வங்கி ஆவணங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மட்டுமே காண்பிக்க முடியும் என்றும், இந்த விசாரணைக் குழு வெளிப்படையான முறையில் தனது பணியைச் செய்யும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








