கிள்ளான், நவம்பர்.13-
கிள்ளான் வட்டாரத்தில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக நம்பப்படுகிறது. அந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு நிமிடம் 17 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களில் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகும். அதில் தப்பி ஓட முயன்றதாக நம்பப்படும் ஒரு கார், அங்கிருந்த பொதுமக்களில் ஒருவரால் தடுத்து நிறுத்த முயற்சிக்கப்படுவதை காட்டுகிறது.
அந்த காணொளி பதிவின்படி , சந்தேக நபரால் ஓட்டிச் செல்லப்பட்டதாக நம்பப்படும் ஒரு வெள்ளை நிறக் கார், சம்பவத்திற்குப் பிறகு விரைந்து செல்வதையும், பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் ஒருவர், எண்ணெய் நிலையத்தில் கீழே கிடப்பதையும் காட்டுகிறது.
அவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டா அல்லது அதன் உறை என்று நம்பப்படும் ஒரு பொருள் கீழே கிடப்பதை அந்த காணொளி சித்தரிக்கிறது. தவிர கீழே கிடக்கும் நபரின் நிலை குறித்து அறிய பொதுமக்கள் முயற்சிப்பதையும் காண முடிகிறது.
இதனிடைய தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி கசாவைத் தொடர்பு கொண்ட போது இந்தச் சம்பவம் தொடர்பாக ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றார்.








