Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்
தற்போதைய செய்திகள்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

Share:

வயது வெறும் எண்கள்தான் என்பதை நிரூபித்துள்ளனர் பினாங்கு 'சில்வர் ஜூபிலி' முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 67 வயது திரு. இங் சாய் ஹிங் மற்றும் 91 வயது திருமதி ஃபூ ரூய் ரோங்.

வெறும் மூன்றே மாத காதலுக்குப் பிறகு, இவர்கள் இருவரும் சீன பாரம்பரிய முறைப்படி முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த இல்லத்திற்கு வந்த எங், அங்கு ஏழு ஆண்டுகளாக வசித்து வந்த ஃபூவைச் சந்தித்தார்.

ஒன்றாக உணவு உண்பது, மாலை நேர நடைப்பயிற்சி என இவர்களது நட்பு காதலாக மாறியது. தனது இளமைக்காலம் முழுவதையும் பெற்றோரை கவனிப்பதிலேயே செலவிட்ட ஃபூவுக்கு இதுதான் முதல் திருமணம்!

அண்மையில் கீழே விழுந்ததால் எங் நடக்க சிரமப்பட்டாலும், உற்சாகத்துடன் தனது மணமகளை அழைத்துச் சென்றார். "நாங்கள் கைகோர்த்து நடக்கும் தருணங்களே மிக இனிமையானவை" என நெகிழ்கிறார் மணமகள்.

முதியோர் இல்ல நிர்வாகத்தின் முழு சம்மதத்துடன் நடந்த இந்தத் திருமண விழா, அங்கிருந்த முதியவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது இருவரும் தனித்தனி அறைகளில் இருந்து மாறி, தம்பதியராக ஒரே அறையில் தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள், ஆனால் சரியான துணை கிடைக்கும்போது தான் கண்கள் திறக்கின்றன என்பதற்கு இந்த ஜோடியே சாட்சி!

Related News