கோலாலம்பூர், நவம்பர்.17-
தங்கள் வீடுகளை இடித்து தரைமட்டாக்கியப் பின்னர் தங்களுக்கு வீடுகள் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில அரசு, வீடுகள் கிடைப்பது தொடர்பில் தங்களுக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் பாபான் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 25 ஆண்டு காலமாக கம்போங் பாப்பான் நிலப் பகுதியில் உள்ள தங்களின் வீடுகளைத் தற்காத்து வந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், தங்களுக்கு வீடுகள் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில அரசு அது தொடர்பாக எழுத்துப்பூர்வமான எந்தவோர் உத்தரவாதத்தையும் வழங்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்போங் பாப்பானில் காலி வீடுகள் மட்டுமே உடைக்கப்பட்டதாக சிலாங்கூர் அரசு தெரிவித்த போதிலும், மக்கள் குடியிருந்த வீடுகளும் உடைக்கப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூரில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம்மின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.








