கோலாலம்பூர், நவ. 16-
சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள சில சட்டவிதிகள், கூட்டரசு சட்டத்திற்கு முரணானவையாகும் என்பதுடன் மனித உரிமையை மீறுவதாகும் என்று பிரபல குற்றவியல் வழக்கறிஞர் டி. ஹர்பால் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் தொடர்பில் கேங் டி.ஆர். என்ற பெயரில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 பேரின் வழக்கு விசாரணை, கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வேளையில் அவ்வழக்கில் சொஸ்மா சட்டத்தில் மேற்கோள்காட்டப்பட்ட சட்டவிதிகளான 4,14,16, 18 A, 20, 30 உட்பட சில பிரிவுகளை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு விரைந்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரி, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் ஓர் அவசர வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் ஹர்பால் சிங் குறிப்பிட்டார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 32 பேருக்கு மேற்கண்ட சட்ட விதிகள், நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது என்பதுடன் வழக்கில் வெற்றி பெறுவதற்கான சாத்தியமே இல்லை வழக்கறிஞர் ஹர்பால் சிங் குற்றஞ்சாட்டுகிறார்.
காரணம், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு தலைபட்சமாக முடிவு செய்யப்பட்டு, ஒருவர் குறைந்தப் பட்சம் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்க வேண்டிய இடர்மிக்க சட்டமாக சொஸ்மா சட்ட விதிகள் விளங்குகின்றன என்று ஹர்பால் சிங் குறிப்பிட்டார்.
உள்நாட்டு பாதுகாப்புச் சட்டமான ISA- விற்கு பதிலாக விசாரணைக் கைதிகளுக்கு பல்வேறு சட்ட வசதிகளை சொஸ்மா வழங்குவதாக அரசாங்கம் கூறுகிறது. குறிப்பாக, விசாரணைக் கைதிகளை 28 நாட்கள் மட்டுமே தடுத்து வைக்க முடியும், வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ள முடியும், ஜாமீனில் அனுமதிக்க முடியும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இவை அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யாகும் என்று ஹர்பால் சிங் குற்றஞ்சாட்டுகிறார்.
கிள்ளான் வட்டாரத்தில் கேங் டி.ஆர். என்று கூறி, சொஸ்மா சட்டத்தின் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 பேரின் நிலை, இதனால் தங்கள் குடும்பத் தலைவன், குடும்ப உறுப்பினரை பிரிந்து, பொருளாதார ரீதியாகவும், வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையிலும் அவதியுற்று வரும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் நிலையை விளங்குவதற்கு இன்று கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வழக்கறிஞர் ஹர்பால் சிங் இதனை தெரிவித்தார்.
திருமணமாகி, பிள்ளைகள் பிறந்து ஐந்து, ஆறு ஆண்டுகளாக குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திக்கொண்டு வந்த தங்கள் குடும்ப உறுப்பினர்கள், TR கும்பலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி, சொஸ்மா சட்டத்தின் 130 ஆவது விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது எந்த வகையில் நியாயம்? அவர்கள் புரிந்த குற்றம்தான் என்ன? அவர்கள் புரிந்த குற்றத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வராமல் கேங் டி.ஆர். என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, அதில் சம்பந்தப்படாதவர்களையும் சம்பந்தப்படுத்தியிருப்பது ஏன்? என்பது பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பத்தினரின் கேள்வியாகும் என்று வழக்கறிஞர் ஹர்பால் சிங் விளக்கினார்.
சொஸ்மா சட்டவிதிகள், விசாரணை கைதிகளை நியாயமான விசாரணையின்றி, குறைந்த பட்சம் 5 ஆண்டு சிறையில் தடுத்து வைப்பதற்கு ஒரு வழிப்பாதையாகும். இதில் வழக்கறிஞர்கள் வெற்றிப் பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்று ஹர்பால் சிங் திட்டவட்டமாக வாதிடுகிறார்.
காரணம், சொஸ்மாவின் 18A ஆவது சட்டவிதி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், வாய்மொழியாக அல்லது எழுத்துப்பூர்வமாக கட்டாயப்படுத்தி வாங்கப்படும் வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அதேபோன்று சொஸ்மாவின் 14 ஆவது சட்டவிதி, சாட்சிகளை பாதுகாக்கிறது. அந்த சாட்சி யார், அவர் என்ன சாட்சியம் அளித்துள்ளார் என்பது குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கும் தெரியாது. அவரின் வழக்கறிஞருக்கும் தெரியாது. அந்த சாட்சியை அவர்கள் பார்க்க முடியாது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்கவும் முடியாது.
ஆனால், நீதிபதியின் கண்முன் மட்டுமே தோன்றும் அந்த சாட்சி, எத்தகைய சாட்சியம் அளித்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, குற்றஞ்சாட்டப்பவருக்கு எதிராக தண்டனை அளிக்க அந்த சொஸ்மா சட்டம் வகை செய்கிறது. இது எந்த வகையில் நியாயம் என்று ஹர்பால் சிங் வினவுகிறார்.








