கோலாலம்பூர், டிசம்பர்.15-
அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-ஆனது சமூக ஊடகப் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிச் செய்யுமே தவிர, அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்காது என எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டமானது அனுமதிப்பதாக எம்சிஎம்சியின் மேம்பாட்டுக்கான துணை இயக்குநர் எனேங் ஃபாரிடா இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள சட்டமானது, சமூக ஊடகங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பகிரும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மட்டுமே அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமூக ஊடகங்களில் பகிர அனுமதித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனைப் பகிர்ந்த தனிநபர் என இருவர் மீதும் புகார் அளிக்க இந்தச் சட்டமானது வழிவகை செய்கின்றது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சமூக ஊடகமானது, அப்புகார்கள் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றது.
அதே வேளையில், சமூக ஊடகமானது, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றத் தேவையான முறைகள் பற்றியும் பயனர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் எனேங் ஃபாரிடா இஸ்கண்டார் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 22 -ஆம் தேதி வரையறுக்கப்பட்ட இந்த இணையப் பாதுகாப்பு சட்டம் 2025-ஆனது, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








