குவாந்தான், டிசம்பர்.18-
இந்த டிசம்பர் மாதத்தில் நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொருளாதாரக் கருணை நிதியான பந்துவான் வாங் இஹ்சான் தொகையை உயர்த்துவது குறித்து அமைச்சரவையில் பரிந்துரைக்கப் போவதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் ஏற்படும் சேதங்கள் மற்றும் மக்களின் தற்போதையப் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியை அதிகரிப்பதற்கான பரிந்துரையை வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான NADMA ( நட்மா ) தலைவரான அஹ்மாட் ஸாஹிட், வெள்ள நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிதியுதவிகள் விரைவாகச் சென்றடைவதை உறுதிச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மக்களின் துயரத்தைக் குறைக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாக துணைப்பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.








